பள்ளி ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி
நீடாமங்கலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் ஒன்றிய அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த சிகரம்தொடு சிலேட்டை எடு என்ற தலைப்பில் நீடாமங்கலம் வட்டார வளமையத்தில் பேச்சுப்போட்டி நடந்தது.நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சத்யா முன்னிலை வகித்தார். ஆசிரிய பயிற்றுனர் ராதிகா வரவேற்றார்.போட்டியில் நீடாமங்கலம் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியை விஜயராணி, நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மகாராஜா, முல்லைவாசல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அபூர்வம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் நல்லிக்கோட்டை நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சிவசிதம்பரம் முதலிடமும், கப்பலுடையான் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஞானசேகரன் இரண்டாம் இடமும், முன்னாவல்கோட்டை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பழனிச்செல்வி மூன்றாம் இடமும் பெற்றனர்.இதில் முதல் 2 இடங்களை பெற்ற ஆசிரியர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட அளவில் நடக்கும் பேச்சுப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். முடிவில் ஆசிரிய பயிற்றுனர் வேலுச்சாமி நன்றி கூறினார்.