ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆவதை தடுக்க முடியாது; திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆவதை தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசிய போது கூறியதாவது:-
தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில் சொத்துவரி, மின்கட்டணம், பால் ஆகியவற்றின் விலை உயர்ந்ததோடு, சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுவிட்டது. எனவே விடியா தி.மு.க. அரசை கண்டித்து 234 தொகுதிகளிலும் மாபெரும் கண்டன அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
தி.மு.க.வினர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் முறையாக நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது. ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அது என்றுமே பலிக்காது. ஒரு மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் ஆவதை தடுக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் பேசினார். கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம், மாவட்ட பொருளாளர் பழனிவேல், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜசேகரன், மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா உள்பட பலர் கலந்துகொண்டனர்.