கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம்: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் சென்னை தின கொண்டாட்டம்
சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் சென்னை தின கொண்டாட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாசார நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அப்போது மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதேபோல கடற்கரையில் அமைக்கப்பட்ட அங்காடிகளுக்கான அரங்குகளை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும், இந்த நிகழ்ச்சியின்போது இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சென்னை தினம் குறித்த பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீரை அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 1,055 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிற மாநிலத்தவரும் வியக்கும் வகையில் சென்னையில் அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதிகள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரை சாலை முழுவதும் வணிக வளாகம் போன்று காட்சியளிக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய திருவிழா நாட்களில் இது போன்ற சிறப்பு அங்காடிகள் அமைக்கப்பட்டு கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-
சென்னை மாநகரம் உருவான ஆகஸ்ட் 22-ந்தேதியை (நாளை) அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், பொதுமக்கள் அனைவரும் சென்னையின் கலாசாரத்தை நினைவு கூறும் வகையிலும் இந்த வருடம் கலாசார நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்கும் போதெல்லாம் சென்னை மாநகருக்கு வரலாற்றில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் ஏதேனும் சிறப்பான நிகழ்வுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் சென்னை தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.