செல்வமுத்துக்குமாரசாமிக்கு சிறப்பு வழிபாடு
வைத்தீஸ்வரன் கோவிலில் செல்வமுத்துக்குமாரசாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் செல்வமுத்துக்குமாரசாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆனி மாத கிருத்திகையையொட்டி செல்வமுத்துக்குமாரசாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் முருகபெருமான் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முருகபெருமான், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முன்னதாக புனிதநீர் கடங்கள் வைத்து ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து பால், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மூலம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.