ராமநவமியையொட்டி சிறப்பு வழிபாடு:கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ராம நவமியையொட்டி, தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-30 18:45 GMT

ராமநவமி வழிபாடு

ராம நவமியையொட்டி நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, கம்பம் ரேஞ்சர் ஆபிஸ் சாலையில் ஆடையவாளு பட்டாபிஷேக ராமர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் பால்குடம் எடுத்து கம்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் திருமண சீர்வரிசைகளும் கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராமர், லட்சுமணன் சீதாதேவி ஆகியோருக்கு அரிசி மாவு, திருமஞ்சன பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 12 வகையான வாசனை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பக்தர்கள் சாமி தரிசனம்

பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் யாகபூஜை, திருமாங்கல்யம் பூஜைகள் நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும் ஜானகி என்ற சீதாதேவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், கூடலூர் கூடலகிய பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பெருமாள் ராமர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். போடி சீனிவாச பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, ராமர், லட்சுமணர் மற்றும் சீதா தேவிக்கு பால், பழம் பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்