பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-04-04 18:47 GMT

அரியலூர் நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள முருகன் கோவில் ஆகிய கோவில்களில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதில் பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து தேரடி, சத்திரம் வழியாக கோவிலை அடைந்தனர். அங்கு முருகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் மீன்சுருட்டி அருகே குண்டவெளி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு செல்லியம்மனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனையும், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். பின்னர் மாலையில் பக்தர்கள் பால்காவடி, அலகு போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இதில் காண சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உடையார்பாளையம் அருகே இடையார் (தூங்கான்) கிராமத்தில் வில்லுப்பிள்ளையார், வள்ளி, தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக புறாக்குளம் ஏரிக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். இதில் பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, அலகு காவடி உள்ளிட்ட 250 காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்தனர். கொண்டு. மாலையில் வள்ளி, தேவசேனா, சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இடையாரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்