திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் 35 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு மொட்டை அடித்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-10-07 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில், 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்று, பின்னர் சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். இருப்பினும் கூட்டநெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக கோவில் வளாகத்தில் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் திரளான பக்தர்கள் நீ்ண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மொட்டையடித்து நேர்த்திக்கடன்

மேலும் நேற்று முன்தினம் முதல் இன்று மதியம் வரை திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பை தோப்பில் அமைந்துள்ள மொட்டை அடிக்கும் கூடாரத்தில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்ததை காணமுடிந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்