தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. காலையில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ தெய்வங்களான விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், சுவாமி, அம்பாள், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது.
திருமுறைகள் உள்ளிட்ட பதிகங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு, பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தங்க மயில் வாகனத்திலும், சோமாஸ்கந்தர் பெரிய ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். பல்வேறு பூஜைகளுக்கு பிறகு ராஜ வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஆண்டிமடம் மேல அகத்தீஸ்வரர் கோவில் கைலாய சிவபூதகண வாத்திய குழுவினர் சிவகண வாத்திய உபசாரம் செய்தனர். வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.