புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-20 19:47 GMT

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில்

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. புற்றுவடிவில் உள்ள அம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறும்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள். மேலும் கோவிலில் ஆவணி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த நாட்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்றவை நடைபெறும்.

பக்தர்கள் தரிசனம்

இந்தநிலையில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் திருவிழாக்கள் நடைபெறாது. ஆனால் வழக்கம்போல் அம்மனை தரிசனம் செய்யலாம். நேற்று ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நடந்தே கோவிலுக்கு வந்தனர். அம்மனுக்கு ரத்னஅங்கி அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி அம்மனை தரிசனம் செய்ய பொதுவழி, சிறப்புவழி என 2 வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த வழிகளின் வழியாக பக்தர்கள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேர்த்திக்கடன்

மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதுமட்டுமின்றி முடிகாணிக்கை, மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு வகையான நேர்த்திக்கடனை செலுத்தினர். கோவிலுக்கு நடைபயணமாக சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்