பொள்ளாச்சி, வால்பாறை கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பொள்ளாச்சி, வால்பாறை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பக்தர்கள் ஆழியாற்றில் கன்னிமார் பூஜை செய்தனர்.
பொள்ளாச்சி
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பொள்ளாச்சி, வால்பாறை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பக்தர்கள் ஆழியாற்றில் கன்னிமார் பூஜை செய்தனர்.
ஆடிப்பெருக்கு விழா
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.
இது மட்டுமின்றி ஆடிப்பெருக்கையொட்டி பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அம்பராம்பாளையம் ஆழியாற்றிற்கு பக்தர்கள் வந்திருந்தனர். பின்னர் கன்னிமார் பூஜை செய்து வழிப்பட்டனர். தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை ஒரு வாழை இலையில் வைத்து, கற்பூரம் ஏற்றி, ஆற்றில் விட்டனர். மேலும் புதுப்பெண்கள் தாலி சரடு மாற்றிக்கொண்டனர்.
வால்பாறையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதில் பக்தர்கள் பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்கள். மேலும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நல்ல மழை பெய்யவும், தேயிலை தொழில் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் முன்னேற்றம் அடையவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி அனைத்து மக்களும் நோய் இல்லாமல் வாழவும் வேண்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
சிறப்பு அபிஷேகம்
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு மஞ்சள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து முதற்கால பூஜையும், மதியம் 12 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் கிணத்துக்கடவு சிவலோகநாதர் உடனமர் சிவலோகநாயகியம்மன் கோவில், பொன்மலை வேலாயுதசாமி கோவில், கரிய காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அலங்கார பூஜை
இது தவிர நெகமம் மாகாளியம்மன் கோவில், செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், நாகம்மன் கோவில், தேவணாம்பாளையம் மாரியம்மன் கோவில், அமணீஸ்வரர் கோவில், கப்பளாங்கரை பரமசிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.