கரூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை யொட்டி கரூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நேர்த்திக்கடன்
கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.
இதில், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மொட்டை அடித்தும், காணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அன்னதானம்
மேலும் பக்தர்களின் வசதிக்காக கரூர் பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை முதல் இரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கரூர் மாவட்ட போலீசார் அதிகளவில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், கோவிலை சுற்றியுள்ள பல்வேறு மண்டபங்கள் மற்றும் பொதுஇடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நொய்யல்-வேலாயுதம்பாளையம்
நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல வேலாயுதம்பாளையம் அருகே உள்ள சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.