சேலத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சேலத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சேலத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இந்நிலையில், புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. கோட்டை பெருமாள் கோவிலில் மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாவட்டம் முழுவதும்...
இதேபோல், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர், பிரசன்ன வெங்கடாசலபதி, கடைவீதி வேணுகோபாலசுவாமி, சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயணசுவாமி, உடையாப்பட்டி சென்றாய பெருமாள், நாமமலை சீனிவாச பெருமாள், குரங்குசாவடி கூசமலை பெருமாள், நெத்திமேடு கரிய பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது.