ஆடி கடைசி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நெல்லையில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்படும்.
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று காலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துசெல்வி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.
நெல்லை கொக்கரகுளத்தில் உள்ள முத்தாரம்மன் சமேத குருசாமி கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் வளைகாப்பு விழா நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல் அணிவித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெண்கள் கும்மி அடித்தனர்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் முத்தாரம்மனுக்கு லட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெறுகிறது.
இதேபோல் நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோவில், புதுஅம்மன் கோவில், பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில், உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், முப்புடாதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று அம்மனுக்கும், பைரவசுவாமி, கருப்பசாமி, சுடலைமாடசாமி உள்ளிட்ட பரிவாரமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதுதவிர நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பல சுடலைமாடசாமி கோவில்களில் நேற்று கொடை விழா மற்றும் சிறப்பு பூஜை, படப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.