கோவில்-தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-01-01 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புத்தாண்டு பிறப்பு

2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறப்பையொட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் 12 மணி அளவில் புத்தாண்டு பிறப்பையொட்டி ஏராளமான இளைஞர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறியபடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு சென்றனர்.

அதேபோல் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே பெண்கள் தங்களின் வீடுகளின் முன்பு புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கோலங்கள் போட்டு வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வருடத்தில் முதல்நாள் கோவில்களில் வழிபாடு செய்தனர். புத்தாண்டையொட்டி கோவில்களில் கூட்டம் அலைேமாதியது.

போலீசார் ரோந்து

நேற்று முன்தினம் இரவு பேக்கரிகளில் இனிப்பு மற்றும் கேக் வகைகளை ஏராளமாக வாங்கி சென்று உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதனால் பேக்கரிகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் போலீசார் இரவு முழுவதும் விடிய விடிய ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதிகவேகமாக வாகனங்களில் சென்றவர்களையும், கூட்டம் கூடியவர்களையும் எச்சரித்து அனுப்பினர்.

புத்தாண்டையொட்டி திருவாடானை சிநேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவில், தொண்டி சிதம்பரேஸ்வரர், உந்தி பூத்த பெருமாள் கோவில், பாண்டுகுடி லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி

அதேபோல் மிகப் பழமை வாய்ந்த ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம், காரங்காடு புதுமை புகழ் தூயசெங்கோல் மாதா, தொண்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயம் உள்பட தொண்டி, திருவாடானை பகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது.

சாயல்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற்றது. அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்