பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பழனியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதன்படி பழனி பெரியாவுடையார் கோவில், மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் செண்பகவல்லி, சமேத கைலாசநாதருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி சிலைக்கு தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.