சென்னையில் இருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரெயில்
சென்னையில் இருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரெயில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதற்கு பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.
சிறப்பு ரெயில்கள் இயக்க கோரிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொழில், வேலை மற்றும் கல்வி போன்ற காரணமாக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பண்டிகையின் போது தனது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்திட தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
குறிப்பாக தீபாவளி பண்டிகை என்பது மிக சிறப்பாக கொண்டாடப்படும். இதனால் அனைவருமே சொந்த ஊருக்கு செல்வதால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
இதன் காரணமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில், அதிலும் போதிய இடம் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுவது வழக்கம். மேலும் ஆம்னி பஸ்களின் கடுமையான கட்டண உயர்வினால் மிகுந்த பாதிப்பு ஏற்படும். இதனால் பலரும் சொந்த ஊருக்கு செல்வது என்பது மிகப்பெரிய போராட்டமாக இருக்கும். எனவே சிறப்பு ரெயில்களும் இயக்கினால் அனைவரும் சொந்த ஊருக்கு செல்வதற்கு மிகுந்த பயன் தரும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
பயணிகள் வரவேற்பு
பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்ட போதிலும் டெல்டா பகுதியான திருவாரூர், காரைக்கால் நாகை, வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை இந்த தடத்தில் ரெயில் இயக்கப்படவில்லை.
இந்தநிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தீபாவளி பண்டிகைக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து திருவாரூர்- பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. இதற்கு ரெயில் பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.
ரெயில் உபயோகிப்பாளர்கள் சார்பில் நன்றி
இதுகுறித்து திருச்சிராப்பள்ளி கோட்ட ெரயில் உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கரன் கூறுகையில்,
சிறப்பு ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு மறுநாள் அதிகாலை 3.25 மணிக்கு வந்து சேரும். பின்பு பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு பகல் 11 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் 24-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 10.30 மணிக்கு வந்து மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6.20 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.
இந்த பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் முதன் முறையாக பண்டிகை கால சிறப்பு ரெயில் இயக்குவதற்கு காரணமாக இருந்த தெற்கு ெரயில்வே பொது மேலாளர் மால்யா, திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், முதுநிலை இயக்குதல் மேலாளர் ஹரிக்குமார் ஆகியோருக்கு ரெயில் உபயோகிப்பாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.