பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலான பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டும் சாப்பிடுவது வழக்கம். பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அதிலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சாமி தரிசனம்
ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் பெருமாள் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அர்ச்சகர்கள் சசிகாந்த, வினய் ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
வேணுகோபால சுவாமி
இதேபோன்று ஊட்டி வேணுகோபால சுவாமி கோவில் உள்பட சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் கூடலூர், கோத்தகிரி, ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் நேற்று காலை முதலே பக்தர்கள் குவிந்து வந்தனர். மேலும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.