குமரி கோவில்களில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை

குமரி மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

Update: 2023-04-23 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

குருப்பெயர்ச்சி

நவகிரகங்களின் பெயர்ச்சி தான் ஒருவரின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாக அமைவதாக சொல்லப்படுகிறது. இதில் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். எனவே தான் நவ கிரகங்களில் குரு பகவானை சுப கிரகம் என்று அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட குரு பகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. குருபகவான் நேற்று முன்தினம் இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார்.

இதையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. கோவிலில் முதற்கடவுளாக திகழும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஓம பூஜை, 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தேவாரணை நடந்தது.

பரிகார பூஜை

மேலும் பக்தர்கள் தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்ட கடலையாலான மாலை, வெள்ளை அரளிமாலை, மஞ்சள் நிற துண்டு, முல்லை பூ மாலை வைத்து தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர். மேலும் பரிகார பூஜைகளும் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுசீந்திரம் கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

இதைப்போல் சுசீந்திரம் தாளக்குளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேசுவரர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி ஜெயந்தீஸ்வரர் கோவில், அழகியபாண்டியபுரம் மகாதேவர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன்கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குரு பகவான் சன்னதிகள் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு மற்றும் பரிகார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பரிகார பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்