கோவில்களில் சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-14 18:45 GMT

பொள்ளாச்சி, 

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

சித்திரை முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பொள்ளாச்சி வெங்கடேசா காலனி அய்யப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த தீபாராதனை, சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் மாரியம்மன் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள வல்லப விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 108 கனி வகைகளை கொண்டு விநாயகருக்கு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி கனகாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5.10 மணிக்கு முதல் மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பொற்காசுகளால் கனகாபிஷேகம் நடந்தது.

சாமி தரிசனம்

வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவில், அய்யப்பன் கோவில், கருமலை பாலாஜி கோவில், சோலையாறு சித்தி விநாயகர் கோவில், பாரளை ஆலமர கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட கவச உடை அலங்காரத்திலும், மாலை அணிந்து பல்வேறு வகை பழ அலங்காரத்திலும் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கந்தசாமி செய்திருந்தார்.

கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில், சிவலோகநாதர் உடனமர் சிவலோக நாயகி கோவில், கரியகாளியம்மன் கோவில், கோவில்பாளையம், காளியண்ணன் புதூரில் உள்ள மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விஷூ பண்டிகை

பொள்ளாச்சி பகுதியில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் விஷூ பண்டிகையையொட்டி வீட்டின் பூஜை அறையில் அனைத்து வகையான பழங்கள், பூக்கள், தானிய வகைகள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதற்கிடையில் ஒரு பெரிய கண்ணாடியும் வைத்து, காலை எழுந்தவுடன், குடும்பத்தில் உள்ள அனைவரும் கனி பார்த்தனர். மேலும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கைநீட்டம் பெற்றுக்கொண்டனர். கேரள பாரம்பரிய உடை அணிந்து விஷூ பண்டிகையை கொண்டாடினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்