கோவில்களில் சிறப்பு பூஜை

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-04-06 18:45 GMT

எஸ்.புதூர்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

பங்குனி உத்திரம்

சிவகங்கை மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. திருவிழாவையொட்டி செட்டிகுறிச்சி வெள்ளிமலை ஆண்டி, சோனை அழகாயி ஆண்டி கோவில், புழுதிபட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி, புழுதிபட்டி வில்லியார் கோவில், தர்மபட்டி தண்டாயுதபாணி, இரணிபட்டி பழனி தண்டாயுதபாணி, எஸ்.புதூர் பாலதண்டாயுதபாணி, பூசாரிபட்டி சுப்பையா முருகன் கோவில், உலகம்பட்டி ஞானியார் மடம் தண்டாயுதபாணி கோவில், மணியாரம்பட்டி முருகன் கோவில், கட்டுகுடிபட்டி வள்ளி, தெய்வானையுடன் முருகன், கிழவயல் தண்டாயுதபாணி கோவில், முசுண்டபட்டி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மானாமதுரை, சிங்கம்புணரி

மானாமதுரை கால்பிரவு செல்வமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்லவமாக வைகை ஆற்றிற்கு சென்று பால்குடம் எடுத்து வீதிஉலா வந்தனர். பின்னர் செல்வமுருகனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் செல்வமுருகன் வள்ளி தேவசேனா சமேதராய் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதே போல் மானாமதுரை பரமக்குடி சாலையில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள செந்தில்ஆண்டவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சிங்கம்புணரியில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக நந்தவனத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பல வண்ண மலர்களை சுமந்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தினமும் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வருகிற 11-ந்தேதி பால்குடம் ஊர்வலம், அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், கோவில் கரகம் அலங்கரித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 9-ம் நாளான 12-ந் தேதி பொங்கல் வைத்தல் வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து முளைப்பாரி எடுத்து நகர்வலம் நிகழ்ச்சியும், 13-ந் தேதி காப்பு கட்டு இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்