கோவில்களில் சிறப்பு பூஜை

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-01 18:45 GMT

கோவை

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டு

உலகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கோவையில் புத்தாண்டை பொதுமக்கள் ஆடி, பாடி வரவேற்று மகிழ்ந்தனர். புத்தாண்டையொட்டி கோவை தண்டு மாரியம்மன், கோனியம்மன், பேரூர் பட்டீசுவரர், மருதமலை சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பொதுமக்கள் நேற்று அதிகாலை முதல் தங்களது பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மருதமலை, பேரூர் பட்டீசுவரர் ஆகிய கோவில்களில் கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அய்யப்ப பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்ததால் மருதமலை அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிறப்பு அலங்காரம்

புத்தாண்டையொட்டி கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவை ஒலம்பஸ் சித்தி விநாய கருக்கு நேற்று சந்தன அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பூ மார்க்கெட் லைட் ஹவுஸ் அருகில் உள்ள காளியம்மன் கோவிலில் ரூ.2 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

புலியகுளம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் சாரதாம்மாள் கோவில் அருகே உள்ள விநாயக ருக்கு தேங்காய் அலங்காரம் செய்யப்பட்டது. புலிய குளம் முந்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அருகம்புல் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம்

இதேபோல் கோனியம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஈச்சனாரி விநாயகர் கோவில், ராம்நகர் ராமர் கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில், கோட்டை மேடு சங்கமேஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நேற்று புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மேலும் செய்திகள்