ஆடிப்பெருக்கையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-03 18:45 GMT

திருவிளக்கு பூஜை

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே சிங்கிலிப்பட்டியில் புடவைக்காரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் வேலகவுண்டம்பட்டியில் உள்ள நல்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நேற்று காலையில் சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பெண்கள் பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து புடவைக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புடவைக்காரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

மாரியம்மன்

ஆடிப்பெருக்கையொட்டி மோகனூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில், வெங்கட்ரமண பெருமாள் கோவில், காந்தமலை முருகன் கோவில், நவலடியான் கோவில், காளியம்மன் கோவில், வள்ளியம்மன் கோவில், சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவில், ஒருவந்தார் பிடாரி செல்லாண்டியம்மன் கோவில், எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவில், முனியப்பன் கோவில், ஆரியூர் முத்துசாமி கோவில் உள்பட இந்தப் பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், புதுமண தம்பதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரம்

பள்ளிபாளையம் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. அம்மன் கோவில் தெருவில் உள்ள பாப்பாயம்மாள் புள்ளாப்பம்மாள் கோவிலில் வாச்சிவ கோத்திரத்தார் காவிரி ஆற்றில் இருந்து பெண்கள் தீர்த்தகுடங்கள், வேல் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது.

பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆதிகேசவபெருமாள், ஓம் காளி அம்மன், முருகன் கோவில், புதன்சந்தை பகுதியில் உள்ள நாகர்கோற்று கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெரியாண்டிச்சி அம்மன் அம்மன் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டு விழா உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் காவடி எடுத்து மேளதாளம் முழங்க நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சி பகுதியில் அண்ணமார் சாமி, பொன்னர் சங்கர் பெரியாண்டிச்சி ஆகிய கோவில்களில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்கரம் நடைபெற்றது. இதேபோல் சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்