மகா பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
மகா பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மகா பிரதோஷத்தையொட்டி பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு இன்று நடைபெற்றது. பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெரியாவுடையார் கோவில், தட்டான்குளம் சிவன் கோவில், அடிவாரம் வேளீஸ்வரர் கோவில் என அனைத்து சிவன் கோவில்களிலும் மகா பிரதோஷத்தையொட்டி சுவாமி, நந்திக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதையொட்டி மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.