அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
நல்லம்பள்ளி
தேய்பிறை அஷ்டமி
நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முதல் சாமிக்கு 108 வகையான நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சாமிக்கு 1,008 அகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. மேலும் உபகார பூஜைகளும் செய்யப்பட்டன. பின்னர் சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமிக்கு மகாதீபாராதனை நடந்தது.
சத்ரு சம்ஹார யாகம்
இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர்,திருவண்ணாமலை மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இரவு கோவிலில் 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமி கோவில் வளாகத்தில் திருவீதி உலா சென்றார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.