முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-05 18:45 GMT

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் அருகே உள்ள கரையாம்புதூர் கருமலை தண்டாயுதபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நேற்று காலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் சாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

இதேபோல் நாமக்கல் - மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலிலும் நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சி

வெண்ணந்தூர் விஸ்வநாதர் ஈஸ்வரர் கோவிலில் ஐம்பொன்னால் ஆன வள்ளி தெய்வானை முருகனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வள்ளி தெய்வானை முருகனுக்கு குடமுழுக்கு விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

தேரோட்டம்

எருமப்பட்டி பழனி நகரில் பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி தேரோட்டம் நடப்பது வழக்கம். இதையொட்டி நேற்று காலையில் முருகனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலில் இருந்து தொடங்கி துறையூர் மெயின் ரோடு, 5 ரோடு கடைவீதி, அய்யர் மேடு வழியாக தேர் கோவிலை அடைந்தது. பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.

கதிர்மலை முருகன்

மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர 2-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா 5 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் கடந்த 1-ந் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மாலை ஊஞ்சல் சேவை சாமி உள் புறப்பாடு நடைபெற்றது. கோ பூஜையுடன் தொடங்கி மகா அபிஷேகம் நடைபெற்றது. கொமாரபாளையம் காவிரி ஆற்றில் நீராடி பக்தர்கள் காவடி, தீர்த்த குடம் மற்றும் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு, பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை கோ பூஜையுடன் தொடங்கி யாகசாலை நடைபெற்றது. உற்சவர் மூலவர் மகாபிஷேகம் நடைபெற்ற வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் நடைபெற்றது. பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்். தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கதிர்மலை முருகன் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

விஜயகிரி வடபழனியாண்டவர்

பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர திருத்தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி விஜயகிரி வடபழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. 29-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை தினந்தோறும் யானை, குதிரை, மயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவம் மற்றும் பூ பல்லக்கும் நடைபெற்றது. நேற்று உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி காலை விஜயகிரி வடபழனியாண்டவர் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

இதில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். இன்று (வியாழக்கிழமை) சத்தாபரணமும், கொடி இறக்குதலும், நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர திருத்தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்