பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி திருக்கோஷ்டியூர், அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-01 18:45 GMT

புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி திருக்கோஷ்டியூர், அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி 2-வது சனிக்கிழமை

ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் அனைத்து சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்தாண்டு கடந்த 24-ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பத்தூர் அருகே சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில், காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில், தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவில், சிவகங்கை சுந்தராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று 2-வது சனிக்கிழமையையொட்டி திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சவுமிய நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்

காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள திருவேங்கட முடையான் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அலமேலு மங்கை தாயாருடன் திருவேங்கடமுடையான் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராம வெங்கடாச்சலம் செட்டியார், கோவில் செயல் அலுவலர் பாலசரவணன் ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவில், சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவில், விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு அரியக்குடி, திருக்கோஷ்டியூர் ஆகிய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்