பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

நீலகிரியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2023-04-22 18:45 GMT

கூடலூர்

நீலகிரியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகை

கடவுள் ஒருவரே, 5 வேளை தொழுதல், ரமலான் நோன்பு இருத்தல், ஏழைகளுக்கு தானம் செய்தல், புனித ஹஜ் பயணம் மேற்கோள்தல் என முஸ்லிம்கள் 5 கடமைகளை பின்பற்ற வேண்டுமென இஸ்லாமிய புனித நூலான குர்ஆனில் கூறப்பட்டு உள்ளது. இதை முஸ்லிம் மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 23-ந் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. தொடர்ந்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு வந்தனர். நோன்பு இருந்து 30 நாட்கள் நிறைவடைந்த நிலையில் பிறை தென்பட்டது. இதைத்தொடர்ந்து ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று கொண்டாடினர்.

சிறப்பு தொழுகை

ஊட்டியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் அசரத் சுல்தான் ஆலம் தலைமையிலும், சின்ன பள்ளிவாசலில் அசரத் முகமது அலி தலைமையிலும், காந்தல் பள்ளிவாசலில் அசரத் இம்ரான் தலைமையிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

இதேபோல் கூடலூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் ஜமால் மவுலவி தலைமையிலும், சின்ன பள்ளிவாசலில் இமாம் அப்துல் காதிர் தலைமையிலும், சுங்கம் பள்ளிவாசலில் பைசல் தலைமையிலும், பழைய நீதிமன்ற சாலையில் உள்ள பள்ளிவாசலில் சிகாபு தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஊர்வலம்

செம்பாலா ஜி.டி.எம்.ஓ.பள்ளிவாசலில் முகமது அலி தலைமையிலும், தேவர்சோலையில் ஷெரிப் மவுலவி தலைமையிலும், மச்சிக்கொல்லி மட்டத்தில் அப்துல் ரகுமான் தலைமையிலும், மசினகுடியில் செய்தலவி மவுலவி தலைமையிலும், நெலாக்கோட்டையில் அபூபக்கர் தலைமையிலும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு தானம் வழங்கினர். தொடர்ந்து உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறினர். சிறப்பு தொழுகையில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று தங்களது மூதாதையர் நினைவிடங்களில் பிரார்த்தனை செய்தனர்.

கோத்தகிரி கடைவீதி பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாம் மவுலவி சதாம் உசேன் தலைமையிலும், ராம்சந்த் சதுக்கம் நூர் உல் உதா மதரஸா பள்ளிவாசலில் தலைமை இமாம்கள் மவுலவி ஜெயிலாபுதீன், அப்துல் மஜீத் தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் அரவேனு, கட்டப்பெட்டு, எஸ்.கைகாட்டி, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்