கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
திருவண்ணாமலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலையில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
மேலும் தேவாலய வளாகத்தில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் வகையில் தத்ரூபமாக குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதையொட்டி கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பலர் அவர்களது வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் முன்பு பல வண்ணங்களில் ஸ்டார்கள் தொங்கவிட்டு மின் விளக்குகளால் மரங்கள் மற்றும் வீட்டை அலங்கரித்து இருந்தனர். பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் புத்தாண்டை அணிந்து மகிழ்ந்தனர்.
சிறப்பு பிரார்த்தனை
திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே உள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபை தேவாலயத்தில் நேற்று காலை கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதிகாலையில் நடத்த பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை சாரோனில் உள்ள தேவாலயத்திலும், தேனிமலையில் உள்ள ஏசு தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
வந்தவாசி
வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
வாணாபுரம்
வாணாபுரம் மற்றும் சுற்றியுள்ள தேவாலயங்களில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. அந்த வகையில் பெருந்துறைப்பட்டு தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவு தொடங்கப்பட்ட கூட்டு திருப்பலியானது அதிகாலை 2 மணிவரை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
அள்ளிக்கொண்டாப்பட்டு, தலையாம்பள்ளம், சோவூர், அந்தோணியார்புரம், தென்கரும்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
செய்யாறு
செய்யாறு தூய வியாகுல அன்னை ஆலயத்தில் அருட்பனி பங்குத்தந்தை லாரன்ஸ் மற்றும் அருட்பனி ஜான் போஸ்கோ ஆகியோர் கூட்டு திருப்பலியை நடத்தினர்.
பின்னர் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து ஏசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆரணி
ஆரணி நகரில் அண்ணா சிலை எதிரே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ தேவாலயத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதேபோல கார்த்திகேயன் சாலையில் உள்ள காணிக்கை அன்னை தேவாலயத்திலும், பழைய ஆற்காடு சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
போளூர்
போளூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்திலும், ஆற்காடு லுத்தான் திருச்சபையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.