தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

வேலூர் மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-09 12:30 GMT

புனித வெள்ளி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து 3-ம் நாளில் உயிரோடு எழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல் (சாம்பல்புதன்) 40 நாட்கள் விரதம் இருந்து தவக்காலத்தை அனுசரித்தனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை 'குருத்தோலை ஞாயிறு' ஆக அனுசரிக்கப்பட்டது. அதையடுத்து புனித வாரத்தில் கடந்த வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைபிடிக்கப்பட்டது. அன்று மாலை தேவாலயங்களில் இயேசுவின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கும், காணிக்கை பவனியும் நடைபெற்றது.

இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் அனுசரிக்கப்பட்டது. இயேசு சிலுவையை சுமந்து செல்லும்போதும், அதில் அறையப்பட்டு மரிக்கும் நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று புனித பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து கடந்த 7-ந் தேதி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஈஸ்டர் பண்டிகை

இந்த நிலையில் இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த 3-வது நாளான நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் அதிகாலை முதல் சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி, வழிபாடு நடந்தது. இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் பைபிள் வசனங்கள் வாசிக்கப்பட்டு, தியானம் செய்யப்பட்டன. அனைவரும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். தவக்காலத்தில் விரதம் இருந்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து, விருந்துண்டு மகிழ்ந்தனர். நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயம், விண்ணரசி மாதா தேவாலயம், ஓல்டு டவுன் ஆரோக்கியமாதா தேவாலயம், சத்துவாச்சாரி, காட்பாடியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி, வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்