தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2023-01-01 18:45 GMT

ஊட்டி,

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஆங்கில புத்தாண்டு

2022-ம் ஆண்டு முடிந்து 2023-ம் ஆண்டு நேற்று பிறந்தது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டை வரவேற்றார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வந்ததும் கூடியிருந்த மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

இந்தநிலையில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. அதில் புத்தாடை அணிந்து கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பங்குத்தந்தை ஸ்டனீஸ், உதவி பங்குதந்தை அபிஷேக் ரிசாரியோ ஆகியோர் முன்னிலையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு பிரார்த்தனை

இதைத்தொடர்ந்து முன்னாள் போப் ஆண்டவர் 16-வது பெனடிக்கின் ஆன்ம சாந்திக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக புதிய ஆண்டை வரவேற்க்கும் விதமாக தேவாலயங்களில் பாடல்கள் பாடப்பட்டது. குறிப்பாக மீண்டும் புதியதாக உருவெடுத்துள்ள கொரோனா வகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மக்களை பாதுகாக்கவும், உலக மக்கள் அன்பு, அமைதி, சமாதானம் பெற சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சாலைகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் அருகில் பரஸ்பரம் கேக் வழங்கி, புத்தாண்டு வாழ்த்து பரிமாறிக்கொண்டனர். இதேபோன்று சுற்றுலா பயணிகளும் இரவு நேரத்தில் சாலைகளில் இருந்தவாறு குதூகலமாக புத்தாண்டை வரவேற்றனர்.

முதியவர்கள் கவுரவிப்பு

குன்னூரில் புனித அந்தோணியார் ஆலயம், பாய்ஸ் கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயம், கேட்டில் பவுண்டு தூய அந்திரேயா ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நல்லப்பன் தெரு ஜோசப் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையை போதகர் ரோட்ரிக்ஸ் பர்னபாஸ் நடத்தி வைத்தார். முடிவில் 70 வயது முதியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராய குழு உறுப்பின் ஜேக்கப், போதக சேகர குழு உறுப்பினர் விமலா அன்புசெல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்