ேதவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-12-25 19:13 GMT

காரைக்குடி,

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

காரைக்குடி செக்காலை தூயசகாயமாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நள்ளிரவு நடைபெற்றது. பங்கு தந்தை எட்வின் ராயன் தலைமை தாங்கினார். உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ்ராஜா, முன்னாள் உதவி பங்கு தந்தை பினாட்டன், மரிய அந்ேதாணிராஜ் ஆகியோர் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சை குழந்தை தெரசாள் ஆலயத்தில் பங்கு தந்தை ஜான்பிரிட்டோ தலைமையிலும், அரியக்குடி வளன்நகர் குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு தந்தை ஆரோக்கிய சகாயராஜ் தலைமையிலும், ஆவுடைபொய்கை தூய அந்தோணியார் ஆலயத்தில் பங்குதந்தை ராஜமாணிக்கம் தலைமையிலும், மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு தந்தை ஜுடு தலைமையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நிைறவேற்றப்பட்டன.

இடைக்காட்டூர்

இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயம் பிரான்ஸ் கலை சிற்ப நுணுக்கத்துடன் கட்டப்பட்டதாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மாதந்தோறும் மக்கள் வந்து செல்வது வழக்கம்.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல்தாசன் தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி மற்றும் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிப்பு அறிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் குடில் அமைக்கபட்டு இருந்ததை ஏராளமானவர்கள் பார்த்து சென்றனர்.

அருளானந்தர் ஆலயம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காளையார்கோவிலில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம், உதவி பங்குத்தந்தை சகாயராஜ் ஆகியோர் நிறைவேற்றினர். இதில் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடினர். வலையம்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் அருட்தந்தை திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஆண்டிச்சூரணி புனித அடைக்கலமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை தைரியநாதன் திருப்பலி நிறைவேற்றினார்.

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அசெம்பிளி ஆப் காட் திருச்சபையில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிப்பாட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏ.ஜி.திருச்சபை மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் குன்னத்தூர் பிரான்சிஸ் சவேரியார் திருச்சபை, கணபதிபட்டி சந்தியாகுவர் திருச்சபை, புழுதிபட்டி கார்மெல் திருச்சபை உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் வழிபாடு நடைபெற்றது.

புனித குழந்தை தெரசாள் ஆலயம்

மானாமதுரை நகர் பகுதியில் உள்ள புகழ்மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. முன்னதாக நள்ளிரவு 12 மணி அளவில் குழந்தை ஏசு பிறக்கும் காட்சி தத்ரூபமாக குடில் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலி பூஜையை நடத்தினார்..இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இனி வருங்காலங்களில் பெரும் நோய் தொற்றுகள் ஏற்படக்கூடாது. இயற்கை சீற்றங்கள் இன்றி மக்கள் அமைதியுடன் மகிழ்ச்சியுடன் வாழ ஜெபம் செய்யப்பட்டது. நள்ளிரவு திருப்பலிபூஜை நிறைவு பெற்றவுடன் புனித குழந்தை தெரசாள் ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் சி.எஸ்.ஐ. ஓசன்னா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைையயொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் விழாவுக்கு வட்டகை மன்ற தலைவர் கிங் சாமுவேல் சற்குணம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கிங் சாமுவேல் சற்குணம் சிறப்புரை ஆற்றினார். இதற்கான ஏற்பாடுகளை குருசேகரத்தலைவர் தேவேந்திர குமார், குருசேகரத்செயலாளர் சாம் பிராங்கிங் டேவிட் மற்றும் திருச்சபை மக்கள் செய்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்