சிறப்பு தொழுகை
தியாக திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள், மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதில் திருச்சி கண்டோன்மென்ட் ஈத்கா மைதானத்தில் ஆற்காடு எண்டோன்மென்ட் சார்பில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த தொழுகையில் ஆற்காடு எண்டோன்மென்ட் தலைமை நிர்வாகி நவுஷாத், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
குர்பானி கொடுத்தனர்
தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திருச்சி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொழுகை நடைபெற்றது. மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். திருச்சி மரக்கடையில் உள்ள அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற பின்னர், ஆட்டு கிடாய்களை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை-எளிய மக்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும் பிரித்து கொடுத்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் உலக மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.