தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-04-14 19:23 GMT

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டையொட்டி புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதன்படி புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் கோ பூஜை, திருப்பள்ளி எழுச்சி, மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் புவனேஸ்வரி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகளை பூஜ்யஸ்ரீ ப்ரணவானந்த சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.

தொடர்ந்து சகஸ்ரநாம பாராயணம் வாசிக்கப்பட்டது. மேலும் அதிர்ஷ்டானத்தில் அருள்பாலிக்கும் அஷ்ட மஹாலெட்சுமிக்கும், பஞ்சமுகவிநாயகர் பஞ்சமுக ஆஞ்சநேயர், முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகள்

அதேபோல் புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில், சாந்தாரம்மன் கோவில், அரியநாச்சியம்மன் கோவில், பாலதண்டாயுதபாணி கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், குமரமலை பாலதண்டாயுதபாணி கோவில், பொற்பனைக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரிமளம் ஜெயவிளங்கி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் மார்க்கெட் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு அம்மன் திருவீதியுலாவும் நடைபெற்றது.

திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் பாரதியார் புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவில், திருவரங்குளம் பிடாரி அம்மன் கோவில், தேரடி கருப்பர் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்-மங்களம் அம்பாள் கோவில், திருவுடையார் பட்டி திருமூல நாதர்- திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், குலவாய்ப்பட்டி சிவன் கோவில், திருமலை ராயசமுத்திரம் கதிர்காமேஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விராலிமலை

விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு முருகன் மற்றும் வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் முருகனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்து அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் சிரமமின்றி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் விராலிமலை கடை வீதியில் உள்ள மெய்க்கண்ணுடையாள் அம்மன் மற்றும் சந்தப்பேட்டையில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குத்துவிளக்கு பூஜை

ஆலங்குடி நாடியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 501 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும், நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலும் அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

வடகாடு மற்றும் அருகேயுள்ள மாங்காடு விடங்கேஷ்வரர் கோவில் மற்றும் அனவயல் முக்கரை விநாயகர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

கீரனூர் தேரடி கருப்பர் கோவிலில் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சந்தன காப்பு அலங்காரமும், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதேபோல் திருச்சி ரோடு புதுவை காட்டு அய்யனார் கோவிலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காகிதப் பூ மாலைகள்

கீரமங்கலம் மெய்நின்ற நாதசுவாமி கோவில் மற்றும் செரியலூர் தீர்த்தவிநாயகர் கோவில், சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில், மேற்பனைக்காடு, கொத்தமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் உள்ள விநாயகர் கோவில்கள், அம்மன் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தும் படையலிட்டனர். குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுடன் பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலைகள் அணிவித்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலங்காத்தார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அடைக்கலங்காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களான தொட்டிச்சி அம்மன், கொங்கணி சித்தன், சன்னாசி, பட்டாணி ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். இதில் மேலதானியம், காரையூர் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆதனக்கோட்டை அருகே உள்ள வீரடி விநாயகர் கோவிலில் மூன்றுகால பூஜைகள் நடைபெற்றது. இதில், ஆதனக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களான குப்பையன்பட்டி, கருப்புடையான்பட்டி, வண்ணாரப்பட்டி, சொக்கநாதப்பட்டி, சோத்துப்பாளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்