குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-22 19:17 GMT

மீனத்தில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சி

குருபகவான் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு நேற்று நள்ளிரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். குருபெயர்ச்சி விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்த குருப்பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தது.

இதையொட்டி கோவிலில் உள்ள மூலவர் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் குருபெயர்ச்சி சுபப்பலன் பெறும் ராசிகளுக்குரிய பக்தர்களும், பரிகார ராசிகளுக்குரிய பக்தர்களும் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தட்சிணாமூர்த்திக்கு...

இதேபோல் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவிலில் குருபகவானுக்கு நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை யாகமும், அதனை தொடர்ந்து இரவு 10.35 மணிக்கு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகமும் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நள்ளிரவு 11.27 மணிக்கு தட்சிணாமூர்த்திக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகங்களும், தட்சிணாமூர்த்திக்கு சோடச அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருபரிகாரம் செய்து கொண்டனர். வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி நேற்று இரவு குருபகவான் மூலமந்திர ஹோமமும், அபிஷேகமும் நடத்தப்பட்டு, தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்