குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-23 19:11 GMT

சிறப்பு பூஜை

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று முன்தினம் இரவு 11.24 மணிக்கு இடம்பெயர்ந்தார். குருப்பெயர்ச்சியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரகங்களில் குரு பகவானுக்கும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தனர்.

புதுக்கோட்டை தேவஸ்தானத்தை சேர்ந்த திருவேங்கைவாசலில் குரு ஸ்தலமான பிரகதாம்பாள் உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் ஒற்றைக்காலில் நின்று அருள்பாலிக்கும் யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பரிகார பூஜைகள் செய்தனர்.

ஆதனக்கோட்டை

ஆதனக்கோட்டை அருகே குப்பையன்பட்டி கிராமத்தில் வீரடி விநாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி வீரடி விநாயகர் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆலங்குடி

இதேபோல புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

ஆலங்குடியில் 2-வது குரு ஸ்தலமாக விளங்கும் நாமபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. விழாவினையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்