விழுப்புரம் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-14 18:45 GMT

விழுப்புரம்:

ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி (சித்திரை மாதம் முதல் நாள்) தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று சுபகிருது வருடம் முடிவடைந்து சோபகிருது வருடம் பிறந்தது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர்

இதேபோல் விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அமராபதி விநாயகர், விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில், திரு.வி.க. வீதியில் உள்ள ஆஞ்சநேயர், கைலாசநாதர், பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆதிவாலீஸ்வரர், விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள சித்தி விநாயகர், பூந்தோட்டம் முத்துமாரியம்மன், ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் உள்ள பாலமுருகன், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேரடி விநாயகர், எடத்தெருவில் உள்ள ஏழை மாரியம்மன், பூவரசங்குப்பம் லட்சுமிநரசிம்மர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில், இஷ்ட தெய்வங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தியும் தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்