ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை

அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-23 18:45 GMT

ஊட்டி, 

அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

அனுமன் பிறந்த நாள், அனுமன் ஜெயந்தியாக நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு காலை 7.30 மணி முதல் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் வெள்ளி கவசத்துடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் ஹரிகிருஷ்ணன், முரஹரி, சடகோபன் ஆகியோர் பிரசாதம் வழங்கினர். முன்னதாக கோவில் வாயிலில் தோரணம் கட்டப்பட்டு, வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் புதுமந்து மற்றும் வேலிவியூ பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் வடை மாலை உள்ளிட்ட அலங்காரங்களில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள், விபூதி, சந்தனம் உள்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பு பூஜை

மார்கழி மாதம் அமாவாசை தினம் நேற்று என்பதால் கூடலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் காலை 5 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஊட்டி மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. கோத்தகிரி டானிங்டனில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் பண்ணாரி மாரியம்மன் கோவில்களிலும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்