ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ஆடி மாத அமாவாசையையொட்டி பெரம்பலூர் நகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட ஆலம்பாடி ரோடு புதிய காலனியில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி அமாவாசை என்பதால் தங்களது வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு விரதமிருந்த பக்தர்கள் கோவிலில் இருந்து மாலை பால்குடத்தை தலையில் சுமந்து புறப்பட்டனர்.
மேள, தாள வாத்தியங்களுடன் புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த கோவிலில் வருகிற 11-ந்தேதி ஆடி பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் இரவு விளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசையையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் பெரம்பலூர் பூசாரி தெருவில் உள்ள ரேணுகாம்பாள், அங்காள பரமேஸ்வரி கோவில், மாரியம்மன் ஆகிய கோவில்களிலும், துறைமங்கலம் கே.கே.நகர் சிவசக்தி மாரியம்மன் கோவில், நியூ காலனியில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் அம்மன் கோவில்களில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையான இன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.