ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-11 19:19 GMT

கடைசி வெள்ளிக்கிழமை

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மிகம் நிறைந்ததாகும். மேலும் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பெண்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவார்கள். இந்த நிலையில் இவ்வாண்டு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் கூழ் ஊற்றப்பட்டன. இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்தினர்.

பிரகதாம்பாள் கோவில்

திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மனோன்மணியம்மன் கோவில், சாந்தநாத சாமி கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், நார்த்தாமலை முத்துமாாியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கீரமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்ற நாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கதம்ப மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஒப்பிலாமணி அம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாம்பணி அம்மன் கோவில்

ஆவுடையார்கோவில் அருகே விளானூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாம்பணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று வந்தால் வீட்டிற்குள் விஷ பூச்சிகள் வராது என்றும், விவசாயத்தில் பூச்சிகள் தாக்காது என்றும், கோழிகளை பாம்பணி அம்மன் கோவிலில் விட்டால் அதற்கு சீக்கு வராமல் இருக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி விளானூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோழிகளை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக அறந்தாங்கி போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கறம்பக்குடி முருகன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி பூஜை செய்தனர். முன்னதாக முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தனலெட்சுமி பூஜை நடைபெற்றது.

குத்துவிளக்கு பூஜை

விராலிமலையில் உள்ள மெய்க்கண்ணுடையாள் அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பொங்கல், கேழ்வரகு கஞ்சி உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். இதேபோல் விராலிமலை வன்னி மரத்தடியில் உள்ள நாகாத்தம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அரிமளம் பேரூராட்சி பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு 11 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மணமேல்குடியில் உள்ள வடக்கூர் முத்துமாரியம்மன் கோவில், தெற்கூர் முத்துமாரியம்மன் கோவில், உச்சமாகாளியம்மன் கோவில், ஜெகதீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்