அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பொள்ளாச்சி
ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தமாக கருதப்படுகிறது. இந்த மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜை, பக்தர்களுக்கு கூழ் உற்றுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிலையில் நேற்று ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல்பாளையத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதேபோன்று கோவில்பாளையம் சேரன் நகர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.
ஊஞ்சல் உற்சவம்
மேலும் பொள்ளாச்சி ரெயில்வே காலனியில் பவுர்ணமி நாககன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மகாலட்சுமி சகஸ்ரநாம பூஜை நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீசீனிவாச பத்மாவதி பஜனா மண்டல ஊஞ்சல் உற்சவம், 6.30 மணிக்கு 108 மஞ்சள் விநாயகர் வைத்து மூல மந்திர பூஜை நடைபெற்றது.
பக்தர்களுக்கு பிரசாதம்
நெகமம் மாகாளியம்மன் கோவில், செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், நாகம்மன் கோவில், தேவணாம்பாளையம் மாரியம்மன் கோவில், அமணீஸ்வரர் கோவில், நெகமம் திருப்பூர் ரோட்டில் உள்ள மாயாண்டீஸ்வரர் கோவில், பெரியகளந்தை ஆதீஸ்வரர் கோவில், காட்டம்பட்டி புதூர் பெருமாள் கோவில், கப்பளாங்கரை பரமசிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.