அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-07-17 19:45 GMT

பொள்ளாச்சி

ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஆடி அமாவாசை

பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி அமாவாசயையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோன்று பொள்ளாச்சி கரியகாளியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் அமாவாசையையொட்டி ஆழியாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து பொதுமக்கள் வழிப்பட்டனர்.

மாசாணி அம்மன்

இதேேபான்று ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் நேற்று அதிகாலையில் ஆனைமலை உப்பாறு மற்றும் ஆழியாறில் நீராடிவிட்டு கோவிலில் நடந்த முதற்கால பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

இதையடுத்து கோவிலில் உச்சிபூஜை, சாயரட்ச பூஜை, தங்கமலர் அர்ச்சனை நடைபெற்றது. கொட்டும் மழையில் நனைந்தவாறு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு பஸ்கள்

அமாவாசை பூஜையையொட்டி மதுரை, தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, திருப்பூர், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஆனைமலைக்கு இயக்கப்பட்டன. மேலும் கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்ததோடு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தயாராக வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

வால்பாறையில் சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன் கோவில், பாரளை ஆலமரக்கோவில், கவர்க்கல் காமாட்சி அம்மன் கோவில், வாழைத்தோட்டம் அய்யப்பன் சுவாமி கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அன்னதானம்

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கந்தசாமி செய்திருந்தார். மேலும் கிணத்துக்கடவில் உள்ள பிளேக் மாரியம்மன், கரிய காளியம்மன், சிவலோக நாயகியம்மன் ஆகிய கோவில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்