பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
ஊட்டி,
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஊட்டி அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் ஊட்டி வேணுகோபாலசுவாமி கோவிலில் அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோத்தகிரி ரங்கசாமி மலையில் ரங்கநாதர் கோவில் உள்ளது. புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி ரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதிக்குள் நடைபயணமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வருகிற புரட்டாசி 3-வது, 4-வது வது சனிக்கிழமைகளில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வனப்பகுதியில் கூடுதலாக போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றனர்.