பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை
புரட்டாசி மாதம் வெங்கடேச பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் மாதம் முழுவதும் பக்தர்கள் விரதம் இருந்து பூஜைகள் செய்வது வழக்கம்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி வேலூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, பூஜைகள் நடந்தன. சாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.
வேலூர் அண்ணாசாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டிருந்தன.
கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மீனூர்மலை
குடியாத்தத்தை அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் ராஜ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
பிச்சனூர்
குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாதர், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலிலும் 27-ம் ஆண்டாக புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மபுரம்
பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பெருமாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
மேல்காவனூர்
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடம் உடையான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு ராஜஅலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சில கோவில்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.