கோவில்களில் சிறப்பு பூஜை

கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2023-04-14 12:19 GMT

தளி

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கிராமங்கள் விழாக்கோலம் பூண்டது.

சித்திரை திருநாள்

சூரிய பகவான் சரியாக கிழக்கு திசையில் சஞ்சரிக்கும் காலமே தமிழ் புத்தாண்டாகும். இந்த நாள் சித்திரைமாத பிறப்பு, சித்திரை கனி, தமிழ்புத்தாண்டு, கேரளாவில் சங்கராந்தி விஷு என்று அழைக்கப்படுகிறது. இதற்காக நேற்று முன்தினம் வீட்டை சுத்தம் செய்து இரவு தூங்க செல்வதற்கு முன்பு மா, பலா, வாழை உள்ளிட்ட கனிகளை அடுக்கி அதனுடன் எலுமிச்சைபழம், வெற்றிலை, பாக்கு மற்றும் நகைகளையும் கொன்றை மலர்களுடன் சேர்த்து தாம்பாலத்தில் வைத்தனர்.

நேற்று காலையில் எழுந்தவுடன் கனிளில் கண்விழித்தனர். இதனால் இந்த வருடமே அனைத்து வகையான நன்மைகளை தரும் என்பது நம்பிக்கை. வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் கலந்தது என்பதால் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி செய்தனர். மேலும் மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பொருட்களான உப்பு, மஞ்சள், அரிசி, கல்கண்டு, நெல் உள்ளிட்டவற்றை வீட்டுக்கு வாங்கி வந்தனர்.

பல்வேறு சிறப்புகளும் பாரம்பரியம் மிக்க தமிழ் புத்தாண்டு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக பக்தர்கள் புண்ணிய தலங்களுக்கு சென்று நதியில் நீராடி மேளதாளங்கள் முழங்க குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கிராமங்களில் அமைந்துள்ள கோவில்களில் வழிபாடு செய்தார்கள்.

ரத்தின லிங்கேசுவரர் கோவில்

அந்த வகையில் உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ரத்தினலிங்கேஸ்வரர், ரத்தினாம்பிகை, நந்தியபெருமான் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள கடவுளுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர்கள் பழங்களுடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ரத்தினலிங்கேஸ்வரர் ரத்தினாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உடுமலை சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்