அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-12-16 17:05 GMT

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இக்கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தீபத்திருவிழாவின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் தற்போது திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி அய்யப்ப பக்தர்களும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மார்கழி மாத பிறப்பு

இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது.

பின்னர் சாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்