கொள்ளையர்களை பிடிக்க கர்நாடகாவுக்கு விரைந்த தனிப்படையினர்
ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க கர்நாடகாவுக்கு தனிப்படையினர் விரைந்தனர். மேலும் அவர்கள் திருவண்ணாமலையில் தங்கிருந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க கர்நாடகாவுக்கு தனிப்படையினர் விரைந்தனர். மேலும் அவர்கள் திருவண்ணாமலையில் தங்கிருந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு திருவண்ணாமலை நகரில் தேனிமலை பகுதி மற்றும் மாரியம்மன் கோவில் தெரு, போளூரில் ரெயில் நிலையம் சாலையில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் 3 ஏ.டி.எம். மையங்களிலும்,
கலசபாக்கத்தில் ஒன் இண்டியா வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும் மர்ம நபர்கள் வெல்டிங் எந்திரத்தின் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் 4 ஏ.டி.எம். மையங்களில் இருந்து ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600 மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் 9 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..
மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற சமயத்தில் கவனக்குறைவாக ரோந்து பணியில் ஈடுபட்டதாக 3 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
கிராமத்து சாலை
இந்த சம்பவம் குறித்து போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரை இணைக்கும் 9 முக்கிய சாலை பகுதிகளிலும், மாவட்டத்தின் புறவழிச்சாலை பகுதிகளிலும், சுங்கச் சாவடிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.
அப்போது திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் புறவழிச்சாலையில் பெரும்பாலான கிராம பகுதிகள் பிரியும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்ததும் தெரியவந்து உள்ளது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் காரில் கள்ளக்குறிச்சி சாலை வழியாக வந்து திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூரில் கொள்ளையடித்து விட்டு ஆந்திரா சென்று இருக்கலாம் என்று போலீசார் ஆரம்பத்தில் இருந்து யூகித்து வருகின்றனர்.
ஆனால் அவர்கள் சென்ற கார் திருவண்ணாமலை- வேலூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளின் கண்காணிப்பு கேமராக்களில் சிக்கவில்லை.. அதனால் அவர்கள் கிராமத்து சாலை வழியாக சென்று இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கி இருந்தார்களா?
கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னதாக கொள்ளையர்கள் திருவண்ணாமலை நகரில் தங்கி இருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு எவ்வாறு செல்வது, சுங்கச்சாவடி இல்லாத பாதை எது, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத சாலைகள் எது என்பதை நன்கு கண்டறிந்து துல்லியமாக திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இறுதியாக போளூரில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் அவர்கள் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு வழியாக ஆந்திர எல்லையை சென்றடைந்து இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனால் போலீசார் திருவண்ணாமலையில் விடுதிகளிலும் சந்தேகப்படும் வகையில் வெளி மாநிலத்தவர்கள் தங்கி இருந்தனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை கும்பல் பெரும்பாலும் கிராமப்புற சாலைகள் வழியாகவே சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த போலீசார்
திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகள், சந்தேகத்திற்கு உரிய கிராம சாலை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற நாட்களுக்கு முந்தைய நாட்களில்கண்காணிப்பு கேமராவில் குற்றவாளிகளின் அடையாளம் பதிவாகியுள்ளதா என்பது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவிற்கு விரைந்தனர்
மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர்.
முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்று இருந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று கர்நாடக மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு போலீசார் கொள்ளை கும்பலை நெருங்கி விட்டதாகவும், நாளை (புதன்கிழமை) கொள்ளையர்களை பிடித்து விடுவார்கள் என்றும் போலீஸ் வட்டாரத்தில் பரவலாக கூறப்படுகிறது.