பாளை. அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு பூங்கா திறப்பு

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.14 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு பூங்காவை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.

Update: 2022-06-17 20:49 GMT

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக ரூ.14 லட்சம் செலவில் சிறப்பு பூங்கா கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, புதிய பூங்காவை திறந்து வைத்தார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகள், படுக்கைகள், மருத்துவ உபகரணங்களை கலெக்டர், எம்.எல்.ஏ. பார்வையிட்டனர். மேலும் கடந்த ஆண்டு அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

ரத்ததானம் செய்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 7.7 லட்சம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. ஆனால் அந்த ரத்த வகைகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் சீராக கிடைப்பது இல்லை. எனவே ரத்ததானம் செய்பவர்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் 3 மாதங்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்கிறவர்கள் இரும்புச்சத்து மிகுந்த பேரீச்சம் பழம், மாதுளை, அத்திப்பழம், கீரைகள், வெந்தயம், சுண்டைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து உடல் நலத்தையும் பேணி காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், கல்லூரி துணை முதல்வர் சாந்தாராமன், ரத்த வங்கி பேராசிரியர் மணிமாலா, மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்