பழனி முருகன் கோவிலில் பாதுகாப்பு வசதிகள் குறித்து சிறப்பு அதிகாரிகள் ஆய்வு

பழனி முருகன் கோவிலில் பாதுகாப்பு வசதிகள் குறித்து சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-06-13 16:52 GMT

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் இன்று, சென்னையில் இருந்து பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் பழனி முருகன் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, தரிசன வழிகள், காத்திருப்பு கூடம், அன்னதான மண்டபம், சுகாதார வளாகம் என அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டனர். மேலும் திருவிழா, கூட்ட காலங்களில் பக்தர்களுக்கு செய்யப்படும் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் தீயணைப்பு கருவிகள், பேரிடர் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக உள்ளதா? என பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் நடராஜன், போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு வெள்ளைசாமி, துணை சூப்பிரண்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பழனி உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய கூடுதல் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்