36 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
குமரி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க 36 இடங்களில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க 36 இடங்களில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சிறப்பு மருத்துவ முகாம்
தமிழக முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று 36 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தன.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஆசாரிமார் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமில் குழந்தைகள், முதியவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இதேபோல் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிறப்பு முகாம் நடந்தது. மேலும் தோவாளை, கிள்ளியூர், ராஜாக்கமங்கலம், மேல்புறம் உள்பட 9 ஒன்றியங்களிலும் நடமாடும் மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த நடமாடும் மருத்துவர் குழுவில் ஒரு டாக்டர், செவிலியர், ஆய்வக நிபுணர் மற்றும் சுகாதார செவிலியர் என 4 பேர் இடம்பெற்றிருந்தனர்.
கொசு மருந்து அடிக்கும் பணி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக்குழுவினரால் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் நேற்று 18 பள்ளிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடந்தன. அப்போது நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையே அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் வீடு, வீடாக சென்று கொசு மருத்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.