ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஈரோட்டில் 70 பேரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஈரோட்டில் 70 பேரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-06-02 20:51 GMT

திருச்சி:

ராமஜெயம் கொலை

திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி திருச்சி-கல்லணை சாலையில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் வீசிச்சென்றனர்.

தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

குறிப்பிட்ட மாடல் காரில் கடத்தல்

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழிந்தும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் ராமஜெயம் கொலை வழக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 3 மாதமாக விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் பயனுள்ள துப்பு தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்கிடையே ராமஜெயத்தை கடத்தி சென்ற கொலையாளிகள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மாடல் காரை பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

ஈரோட்டில் விசாரணை

அந்த வகையான காரை பயன்படுத்திய நபர்கள் குறித்து தமிழகம் முழுவதும் விசாரித்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் அந்த நிறுவனத்தின் காரை கடந்த 2012-ம் ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தி இருந்தது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட தகவலில் தெரியவந்தது. இதையடுத்து அந்த கார் உரிமையாளர்கள் ஒவ்வொருவராக சந்தித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களில் 60 சதவீத உரிமையாளர்களிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்